பேராசான் வி.க.கணேசலிங்கம்

Professor Emeritus V K Ganesalingam (as appeared in 1992)

Professor Emeritus V K Ganesalingam (01-06-1935 -- 06-05-2018)

வரலாற்றின் ஒரு பதிவாக வாழ்ந்து மரணித்த பேராசான் வி.க. கணேசலிங்கம்

“எளிமையும் அமைதியுமானவர்களிடமிருந்து ஆழமான சிந்தனைகளும், செயற்பாடுகளும் வெளித்தோன்றுகின்றன” என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் பேராசிரியர் வி.க. கணேசலிங்கம்.

ஆவரங்கால் என்ற கிராமத்தில் 1935ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 1ஆந் திகதி பிறந்து தனது கடின உழைப்பால் உன்னத பேராசானாக உயர்ச்சி பெற்று, கடந்த 6ஆந் திகதி தனது 82 ஆவது வயதில் இலண்டனில் காலமானார்.

தனது ஆரம்பக்கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாவிலும், உயர்தரக்கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும்  பெற்று பின்னர் இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வளாகத்தில், 1962ஆம் ஆண்டு விலங்கியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மேற்படிப்பிற்காக அமெரிக்காவிலுள்ள ஹவாய் பல்கலைக்கழகத்திற்கு சென்று முதுவிஞ்ஞானமானிப் பட்டத்தை 1965ஆம் ஆண்டிலும், கலாநிதிப் பட்டத்தை புகழ் பெற்ற லண்டன் பல்கலைக்கழக இம்பீரியல் கல்லூரியில் 1970இலும் பெற்றுக்கொண்டார்.

தனது பல்கலைக்கழக சேவையை 1962இல் ஒரு செய்முறை வழிகாட்டுநராக இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வளாகத்தில் ஆரம்பித்து பின்னர் தகுதிகான் விரிவுரையாளராக பேராதனை வளாகத்தில் 1963இல்  இணைந்து கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்ட போது விலங்கியல்துறையின் முதல் தலைவராகவும், முதல் பேராசிரியராகவும் 1975ஆம் ஆண்டு இணைந்து 2001ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறையில் சேவையாற்றி அதன் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் அளப்பெரிய பங்காற்றினார்.

 

கல்விப்பணியும் ஆராய்ச்சியும்

விலங்கியலில் பரந்த அறிவு கொண்டிருந்த பேராசிரியர், பூச்சியியலில் சிறப்புத் தேர்வு பெற்று அத்துறையில் ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். மாணவர்களால் விரும்பப்படும் மிகச்சிறந்ததொரு ஆசிரியராக திகழ்ந்தது மட்டுமன்றி, தனது விரிவுரைகளை நேர்த்தியுடனும், சிறப்பாகவும், சுவாரசியமாகவும் நிகழ்த்துவதில் தனக்கென ஒரு முத்திரையை விலங்கியல் துறையில் பதித்திருந்தார்.

விரிவுரைகளுக்கப்பால், ஆராய்ச்சியில் அதிக நாட்டம் கொண்டிருந்தது மட்டுமன்றி, தனது வழிகாட்டலில் பல முது விஞ்ஞானமானி பட்ட மாணவர்களை உருவாக்கினார். ஆரம்ப காலத்தில் பூச்சி உடற்தொழிலியலில் ஆய்வுகளை மேற்கொண்டார். தனது கலாநிதிப்பட்டப்படிப்பின் ஆராய்ச்சி முடிவுகளை புகழ்பூத்த விஞ்ஞான சஞ்சிகையான “நேச்சர்” (Nature) இல் 1970இல் வெளியிட்டார். பின்னர் பூச்சி பீடைக்கட்டுப்பாட்டில் ஆர்வம் கொண்டு பல ஆய்வுகளை இறுதிவரை மேற்கொண்டார். இத்துறையில் இலங்கையின் முன்னிலை ஆய்வாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். தான் பெற்ற அறிவையும் ஆராய்ச்சி முடிவுகளையும் அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கான பல உசாத்துணை நூல்களை பிரசுரித்தார்.

பல்வேறு புலமைப்பரிசில்களை வென்று, ஐக்கிய இராய்ச்சியத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம், இலண்டனிலுள்ள இயற்கை வரலாற்று நூதனசாலை, இலண்டன் பல்கலைக்கழகம் என்பவற்றிற்கு சென்று பூச்சியியலில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஆராய்ச்சி மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடு அவரது மாணவர்களை தூண்டியது மட்டுமன்றி அவர் இட்ட அடித்தளமே இன்று ஆராய்ச்சியில் யாழ் பல்கலைக்கழக விலங்கியல்துறை முன்னிலை வகிக்கவும் வழிகோலியது.

குறிப்பாக 1990களில் யாழ்குடாநாடு, பாரிய பொருளாதார தடையை சந்தித்து தெற்குடனான தரைவழித் தொடர்பை அற்றிருந்த நிலையில் அப்போதைய  துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராசாவின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்து யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தை ஆரம்பித்து யாழ். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது ஆய்வுகளை வெளிக்கொணர களம் அமைத்து கொடுத்தார். யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் முக்கிய செயற்றிட்ட நிரலாக பாடசாலைகளில் விஞ்ஞானத்தை பிரபல்யமாக்கும் செயற்பாட்டை முன்னின்று நடத்தினார். அது மட்டுமன்றி அக்காலத்தில் ஆபத்தானதும் கடினமானதுமான “கிளாலி”  கடல் பயணத்திற்கூடாக விலங்கியல்துறை மாணவர்களை வன்னிக்கு அழைத்து சென்று பூச்சியியல் செயன்முறை பட்டறைகளை நடாத்தினார். வயது முதிர்ந்த ஒரு பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த போதும் தனது தோளில் உரைப்பையில் கட்டப்பட்ட ஆய்வுகூட உபகரணங்களை சுமந்து கடினமான  “கிளாலி” கடற்பரப்பில் நடந்து சென்றமை இக்கட்டுரையாளனின் மனத்திரையில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

 

நிர்வாகப்பணி

பேராசிரியர் அவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு மேலாக விலங்கியல் துறையினது மட்டுமன்றி விஞ்ஞானபீடம் மற்றும் ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டார். மூதவை மற்றும் பேரவையில் குரல்கொடுக்கும் ஒரு முக்கிய உறுப்பினராக திகழ்ந்தது மட்டுமன்றி துறைத்தலைவர் பதவிக்கப்பால் விஞ்ஞான பீடாதிபதியாக இரண்டுமுறை (1988–1991,  1996–1999) செயலாற்றினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் கடந்து வந்த துன்பியல்காலங்களில் பல புத்தி ஜீவிகள் நாட்டைவிட்டு வெளியேறிய போதும் மனம் தளராது சொந்த மண்ணில் மக்களோடு மக்களாக வாழ்ந்து பல்கலைக்கழக மீள் எழுச்சிக்கு பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் பல்கலைக் கழகம் இரண்டு பாரிய பின்னடைவுகளையும் இழப்புக்களையும் சந்தித்தது ஒன்று 1980களில் பிற்பகுதியில் இந்திய அமைதிப்படையின் வருகையும்@ இரண்டு 1995ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்ச்சியுமாகும்.

திடீரென ஏற்பட்ட துணைவேந்தர் இல்லாத இடத்தை, 1988ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராக பேராசிரியர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும், பல்கலைக்கழக  சமூகமும் பாரிய சவால்களை எதிர்கொண்டனர். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளானபோது பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் பல நாட்கள் மாணவர்களுடன் தங்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். எத்தரப்பில் இருந்தும் உயிராபத்து ஏற்படக்கூடிய அக்காலத்தில் - புத்தி ஜீவிகள் மௌனம் காத்த நேரத்தில் - பதில் துணைவேந்தர் என்ற கோதாவில் யாழ் குடா நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது, சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்ட வேண்டியவர்கள் பொறுப்பற்று செயற்படுகின்றார்கள் என்று மிகத்துணிச்சலுடன் தனது உயர் அதிகாரிகளுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்தார். இவர் பதில்துணைவேந்தராக இருந்தபோது இந்திய அமைதிப்படையினரால் ஒரு நாட்டின் உயர்கல்வியின் இருப்பிடமாகிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்றும் பாராமல் கலட்டிச்சந்தியில் இருந்த தமது முகாமுக்கு அநாகரிகமாக கால் நடையாக கூட்டிச்செல்லப்பட்ட சம்பவத்தை அவர் தனது சுயசரிதையில் “ஒரு உபவேந்தரை நடத்தும் விதம் இது  தானா?” என மனம்நொந்து குறிப்பிட்டுள்ளார்.

 

சமூகப்பணி

பெரும்பாலான பேராசிரியர்கள் தமது பல்கலைக்கழக வாழ்க்கையை விரிவுரை மண்டபத்திலும், ஆய்வு கூடத்திலும் கழிக்கின்ற போது பேராசிரியர் அவர்கள் ஒரு படி மேலே சென்று அளப்பெரிய சமூகப்பணி செய்த பேராசானாக திகழ்ந்தார். ஆரம்பத்தில் அலிமா சங்கத்தில் இணைந்து சமூகப்பணிகளை மேற்கொண்ட பேராசிரியர் பிற்காலத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தில் 1984ஆம் ஆண்டு இணைந்து 2001ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார். போர்ச்சூழல் நிறைந்த 1990களில் இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ்ப்பாணக் கிளைத் தலைவராக செயலாற்றினார். குறிப்பாக விமானக்குண்டுவீச்சாலும், எறிகணைத் தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்க தற்துணிவுடன் செயற்பட்டார். ஆயுத மோதலில் அப்பாவிப் பொது மக்களின் பாதிப்பை வெளியுலகுக்கு தெரியப்படுத்தினார்.  குறிப்பாக 1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமானக்குண்டு தாக்குதலில் பலியானவர்களினதும், படுகாயமடைந்தவர்களினதும் எண்ணிக்கையை உறுதிப்படுத்தி அச்செய்தி வெளியுலகை சென்றடைய துணிச்சலாக செயற்பட்டார். ஒரு பேராசிரியராக இருந்த போதும் நிவாரணப் பொருட்களை தானே சுமந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஓர் உன்னத மனிதராக பேராசிரியர் திகழ்ந்தார். அது மட்டுமன்றி 1999 – 2001 ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை செஞ்சிலுவைச்சங்க குழுவின் அங்கத்தவராக ஜெனீவ சென்று தமிழர் பிரச்சினைகளை துணிச்சலுடன் எடுத்துக்கூறியமை பலர் அறிந்து இருக்க முடியாது.

ஒரு சிறந்த கல்வியாளராக, ஆராய்ச்சியாளராக, நிர்வாகியாக, சமூக சேவகனாக மிளிர்ந்து, யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியில் மட்டுமன்றி வடபுல தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற பேராசிரியர் கடந்த 13ஆந் திகதி இலண்டனில் தான் நேசித்த தமிழ் மரபுக்கு இணங்க பட்டுவேட்டி, நஷனல் சால்வையுடன் தகனம் செய்யப்பட்டார்.

சைவ மதத்தில் பிறந்து, சைவ மரபில் வளர்ந்து வாழ்ந்த பேராசான் மானிட வாழ்வை பிரதிபலிக்கும் பின்வரும் கிறிஸ்தவ வேதாகம திருவசனங்களைக் குறிப்பிட்டு தனது சுயசரிதையை நிறைவு செய்கின்றார்:

“நல்ல போராட்டத்தை போராடினேன், நம்பிக்கையை காத்துக்கொண்டேன் (1 தீமோத்தேயூ 4:7)”,
“ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் அதிக கனிகளை கொடுப்பான் (யோவான் 15:5)”

ஆம், சிறந்த போராட்டத்தை போராடி அநேகருக்கு கனி கொடுத்து நம்பிக்கையை காத்து கொண்ட பேராசான், யாழ் பல்கலைக்கழக விலங்கியல்துறை நிலைக்கும் வரை என்றும் நிறைந்திருப்பார்.

 

கலாநிதி. சி. நோ. சுரேந்திரன்
பேராசிரியர், விலங்கியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்